அதிவேகமாகச் சென்ற ஆளுநர் காருக்கு நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்: அபராதத்தை ஏற்ற ஆளுநர் மாளிகை

0
0

போக்குவரத்து விதிகளை மீறி, அதிவேகமாகச் சென்ற ஆளுநரின் காருக்கு கேரள போலீஸார் விதித்த அபராதத்தைச் செலுத்தக்கோரி ஆளுநர் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

கேரள ஆளுநராக இருப்பவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம். கடந்த இரு மாதங்களுக்கு முன், ஏப்ரல் 7-ம் தேதி ஆளுநர் சதாசிவம் பயன்படுத்தும் மெர்சடீஸ் பென்ஸ் காருக்கு டீசல் நிரப்புவதற்காக எடுத்துச் சென்றனர்.

அப்போது, வெள்ளியம்பலம்-கவுதியார் பகுதிச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் ஆளுநரின் அதிகாரப்பூர்வ கார் அதிவேகமாகச் சென்றது. இது சாலையில் பொருத்தப்பட்டிருந்த வேக்கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

இதைக் கவனித்த போக்குவரத்துப் போலீஸார் ஆளுநர் சதாசிவம் சென்ற கார் போக்குவரத்துவிதிகளை மீறியதாகக்கூறி ரூ.400 அபராதம் விதித்தனர். அதற்குரிய ரசீதை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தத் தகவல் ஆளுநர் சதாசிவத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் அந்த காரில் தான் செல்லவிட்டாலும்கூட, தான் பயன்படுத்தும் கார் விதிமுறைகளை மீறி, அதிகவேகமாகச் சென்றது தவறு என்றார்.

விதிமுறைகளை மீறுவோர் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் உதாரணமாக இருக்கவேண்டும், போக்குவரத்து போலீஸார் விதித்த 400 ரூபாய் அபாரதத்தொகையை செலுத்த அதிகாரிகளுக்குச் சதாசிவம் உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ஆளுநர் பயன்படுத்தும் காருக்கு டீசல் நிரப்ப எடுத்துச் சென்றார்கள். ஆனால், அப்போது காரில் ஆளுநர் இல்லை. இருந்தபோதிலும் விதிமுறைகளை மீறியதாக விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தை ஆளுநரின் செயலாளர் செலுத்திவிட்டார்’ எனத் தெரிவித்தனர்.

இது குறித்து மாநில கேரள போக்குவரத்து ஆணையர் கே.பத்மக்குமார் கூறுகையில், “ ஆளுநர் சதாசிவம் நடந்து கொண்டது மிகவும் சிறப்பானது. வெள்ளியம்பலம்-கவுதியார் சாலையில் அதிகாரிகளின் கார் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் அதிகமாகச் செல்வது இது முதல் முறை அல்ல.

நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் ஆகியோர் வேகக்கட்டுப்பாட்டை மீறி இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாங்கள் ரசது அனுப்பி இருக்கிறோம். அவர்களும் அபராதத்தைச் செலுத்திவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.