அதிமுகவினர் அஞ்சவில்லை; தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து

0
0

‘என்னைப் பொறுத்தவரை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். அதிமுகவும், எங்கள் கட்சியினரும் தேர்தலை கண்டு ஒருபோதும் அஞ்சியதில்லை’ என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் 12 புதிய அரசு பஸ்களை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அதிமுக சார்பில் டெல்லியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்.

அதிமுகவும், எங்கள் கட்சியினரும் தேர்தலை கண்டு ஒருபோதும் அஞ்சியதில்லை. என்றாலும் மக்களால் 5 ஆண்டுகளுக்கு அதிமுக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக ஆட்சி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே இன்னும் இரண்டரை ஆண்டுகள் எங்களை ஆட்சி செய்ய விடுங்கள்.

தேர்தலை கட்டாயப்படுத்தி மக்கள் மீது திணிக்கும்போது வரிப்பணம் வீணாகும். தேவையற்ற சிரமங்கள் ஏற்படும். ஆனால், மக்களவையோடு சட்டப்பேரவைக்கு தேர்தல் வருவதை எதிர்க்கிறோம்.

பொதுமக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்குதான் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வர உள்ளது மண்ணின் மைந்தர்க ளான எங்களுக்கு பெருமையாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.