அதிகாரப் பகிர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த அதிகாரிகள் உட்பட அனைவர் ஒத்துழைப்பும் தேவை: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வேண்டுகோள்

0
0

அதிகாரப் பகிர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த அரசு அதிகாரிகள் உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. டெல்லி அரசு எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளை செயல்படுத்துவதற்கு துணை நிலை ஆளுநர் அலுவலகம் முட்டுக்கட்டை போட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகார வரம்புகளை வரையறை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளதாகவும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

டெல்லி அமைச்சரவை முடிவுகளுக்கு உட்பட்டே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பில், டெல்லி அரசு மற்றும் துணைநிலை ஆளுநர் ஆகியோருக்குரிய அதிகார வரம்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, இந்தத் தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த அரசு அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். மேலும், டெல்லியின் வளர்ச்சிப் பணிகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.