அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார்; அரசு வெளிப்படையாக செயல்படுவதால் தான் தவறு செய்தவர்கள் சிக்கினர்: அமைச்சர் ஜெயக்குமார்

0
0

தமிழக அரசு வெளிப்படையாக செயல்பட்டு வருவதால்தான் அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முறைகேடு விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017 ஏப்ரல், மே மாதங்களில் பருவத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் குறைந்த மதிப்பெண் மற்றும் தோல்வி அடைந்த 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 16 ஆயிரத்து 636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றனர்.

வழக்கத்திற்கு மாறாக பெரும்பாலான மாணவர்கள் மறு மதிப்பீட்டில் தேர்ச்சியடைந்ததால், பேராசிரியர்கள் சிலர் மாணவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்று கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அறிந்த மீனா என்ற மாணவி உரிய ஆதாரங்களுடன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் புஷ்பலதா விசாரணையைத் தொடங்கினார். அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா மற்றும் பேராசிரியர்கள் விஜயகுமார், சிவக்குமார், சுந்தரராஜன், மகேஷ் பாபு, அன்புச்செல்வன், பிரதீபா, பிரகதீஸ்வரர், ரமேஷ் கண்ணன், ரமேஷ் ஆகிய 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்களுள், உமா மீதான குற்றச்சாட்டு விசாரணையில் நிரூபணமானதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை டெல்லி புறப்பட்ட அமைச்சர் ஜெயக்குமார், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 அப்போது அவர் கூறுகையில் “தமிழக அரசு சரியான முறையில் இயங்கி வருவதால் தான் அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முறைகேடு விவகாரம் கண்டுபிடிக்கப்படுகின்றன, தவறு செய்தவர்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்குகின்றனர். தவறு செய்தவர்கள் சிக்காமல் இருந்தால் தான் அவர்களின் தவறுக்கு அரசு துணைபோகிறது என்று அர்த்தம்.

அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் குற்றம் இழைத்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஏற்கெனவே கூறியிருக்கிறார்.

அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது. அரசு வெளிப்படையாக இருப்பதால்தான் குற்றம் செய்தவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில் அரசு  செயல்படுகிறது” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.