அணை தண்ணீரை பயன்படுத்த தமிழகத்தைபோல கர்நாடகாவுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் வலியுறுத்தல்

0
0

கர்நாடக மாநிலம் தனது அணைகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்துவதற்கு தமிழகத்தைப் போன்று உரிய கட்டுப்பாடுகளை விதிக்கும்படி வரும் 19-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி ஆணைய ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: தமிழகத்தில் மேட்டூர் அணையை பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி திறந்து, ஜனவரி 28-ம் தேதி மூட வேண்டும் என்ற சட்டம் கடந்த 1921-ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு இன்றளவும் நடைமுறையில் உள்ளது. குறுவை, தாளடி, சம்பா சாகுபடி பருவங்களை உள்ளடக்கியே இந்த கால நிர்ணயத்தை செய்தனர்.

இந்த காலகட்டத்தை தவிர மற்ற நாட்களில் பாசனத்துக்கு தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி இல்லை. குடிநீர் தேவைக்கு மட்டும் 500 அல்லது 1,000 கன அடி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால், கர்நாடகா மாநிலத்துக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் இதுவரை விதிக்கப்படவில்லை.

தன்னிச்சையாக முடிவு

இதனால் தன்னிச்சையாக அணைகளில் உள்ள தண்ணீரை கர்நாடகத்தினர் செலவழித்துவிட்டு, தமிழகத்துக்கு தண்ணீர் கேட்கும்போது அணையில் தண்ணீர் இல்லை என்று கூறிவிடுகின்றனர்.

இதன் காரணமாக குறுவை, தாளடி ஆகிய சாகுபடி பருவங்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.

இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் காவிரி வழக்கு நடைபெற்றது. 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வழங்கப்பட்ட நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நீர் மேலாண்மை செய்ய உத்தரவிட்டதும் இதன் அடிப்படையில்தான்.

எனவே, வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள காவிரி ஆணைய ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழகம் சார்பில் பங்கேற்கும் அதிகாரிகள், மேற்கண்ட விவரங்களை அழுத்தமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் மேட்டூர் அணையை திறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் போன்று கர்நாடக அணைகளை கையாள்வதற்கும் உரிய கட்டுப்பாடுகளை காவிரி ஆணையம் விதிக்க வலியுறுத்த வேண்டும் என்றார்.