அசாம் விமான நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் இரவு முழுவதும் போராட்டம் – தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு

0
0

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய சென்ற திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் அசாமில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், இரவு முழுவதும் விமான நிலையத்தில் தங்கி போராட்டம் நடத்தினர்.

அசாமில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. இதற்காக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்தனர்.

இதன் இறுதி வரைவுப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், ஏராளமானோர் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது. வங்கதேசத்தவர் குடியேறும் பிரச்சினையை மதரீதியாக பாஜக கையாள்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தநிலையில், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி.க்கள், அமைச்சர்கள் என 8 பேர் குழுவினர் நேற்று அசாம் சென்றனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நடைபெறும் பிரச்சாரத்தில் அவர்கள் கலந்து கொள்ள இருந்தனர். இதற்காக சில்சார் விமான நிலையம் வந்த அவர்களை அசாம் போலீஸார் தடுத்து நிறுத்தினர். சில்சாரில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அசாமில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை கையை பிடித்து இழுத்து வெளியேற்ற முயலும் அசாம் போலீஸார்   –  படம்: பிடிஐ

 

சில்சார் விமான நிலையத்தைவிட்டு வெளியேற மறுத்த அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டம் நடத்தினர். அசாமை விட்டு திரும்பிச் செல்ல முடியாது எனக் கூறி அவர்கள் முழுக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து விமான நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த அறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே கழித்தனர். காலை மீண்டும் அவர்கள் சில்சார் செல்ல அனுமதிக்குமாறு கோரினர்.

ஆனால் சில்சார் நகருக்குள் செல்ல வெளியாட்டுகளுக்கு அனுமதியில்லை எனக்கூறி அம்மாவட்ட ஆட்சியர் மறுத்து விட்டார். பல மணிநேரம் நடந்த போராட்டத்திற்கு பின்பும் அனுமதி கிடைக்காததால் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளில் 6 பேர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மற்ற இருவர் பிறகு கிளம்பிச் செல்வதாக கூறி விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.